யார் இந்த எம்.ஏ பேபி? சிறுபான்மை சமூகத்தில் இருந்து CPM தேசிய பொதுச்செயலாளர்
எம்.ஏ.பேபி சிபிஎம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பொதுச் செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தொடர்ந்து அக்கட்சியின் தற்காலிக ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுரையில் நடந்த கட்சி மாநாட்டில் கேரளாவை சேர்ந்த மரியம் அலெக்சாண்டர் பேபி, சிபிஎம் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மரியம் அலெக்சாண்டர் பேபி(70) கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பிறந்தவர்.
பள்ளி காலத்திலேயே கேரள மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். பின், இந்திய மாணவர் சங்க தலைவராக செயல்பட்டார். இதனையடுத்து சிபிஎம் கட்சியின் இளைஞர்கள் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவராக தேர்வானார்.
யார் இந்த எம்.ஏ பேபி?
எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றார். 1986ல் மாநிலங்கள் அவை உறுப்பிரான தேர்வு செய்யப்பட்டார். 1999ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியில் சேர்க்கப்பட்டார். 2006ல் சட்டமன்ற தேர்தலில் குண்டாரா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று அச்சுதாநந்தன் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
ஆத்திகவாதியான இவர் அமைச்சராக இருந்த போது கடவுள் மறுப்பு கொள்கை குறித்து பள்ளி புத்தகத்தை சேர்த்ததால் சர்ச்சை வெடித்தது. 2011ல் தனது தொகுதியிலேயே மீண்டும் வெற்றிப்பெற்றார். 2014ல் கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு புரட்சிக்கர ஷோசலிச கட்சி வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கேரளாவை சேர்ந்த நம்பூதிரிபாத் இருந்தபோது, தேசிய அளவில் கட்சி பணிகளில் பேபி ஈடுபட்டிருந்தார். அவருக்கு பின் 2வது நபராக தேசிய பொதுச்செயலராக தேர்வாகியுள்ள எம்.ஏ.பேபி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அசோக் தவாலேவை தேர்வு செய்ய முன்மொழிந்த நிலையில், Polit Bureau உறுப்பினர்கள் அதிகமானோரின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.