பழுதான ஓலா இ-பைக்... ஆத்திரத்தில் தீயிட்டு கொளுத்திய பிசியோதெரபிஸ்ட்
வேலூரில் புதிய ஓலா பைக் பழுதாகி புகார் செய்தும் ஆட்கள் வராததால் அதன் உரிமையாளர் பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக இ-பைக் தீப்பிடித்து எரியும் சம்பவம் அடுத்தடுத்து நடைபெற்று வருவதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட இ-பைக்குகள் வாங்குவது குறித்து பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
இதனிடையே வேலூரில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய ஓலா பைக் பழுதாகி புகார் செய்தும், அதனை சரிசெய்ய நிர்வாகம் தரப்பில் ஆட்களை அனுப்பாததால் ஆத்திரத்தில் பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பிசியோதெரபி நிபுணரான பிரித்திவிராஜ் சமீபத்தில் ஓலா பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஓலா பைக்கை குடியாத்தம் ஆர்டிஓ ஆபீஸ் க்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்காக எடுத்துச் சென்று விட்டு அங்கிருந்து வந்த போது லட்சுமிபுரம் என்ற பகுதியில் பழுதாகி நின்று உள்ளது. இதுகுறித்து சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து சொல்லியுள்ளார்.
2 மணி நேரமாகியும் அவர்கள் வராததால் ஆத்திரத்தில் ஓலா பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதனுடைய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.