பஞ்சாப் முதல்வரை வீழ்த்திய செல்போன் ரிப்பேர் செய்யும் கடைக்காரர் - எப்படி கிடைத்தது இந்த வெற்றி?
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை அவரின் சொந்த தொகுதியிலேயே போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்துள்ள இளைஞர் வீழ்த்தியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்துள்ள நிலையில் அங்கு முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைகிறது. இந்த தேர்தலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மொத்தம் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வி அடைந்துவிட்டார்.
அதில் சம்கார் சாகிப் தொகுதியில் முதல்வர் சரண்ஜித் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் லாப் சிங் என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான உள்ளூரைச் சேர்ந்த லாப் சிங் அங்கு மொபைல் போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்துள்ளார். மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்த இவரின் அப்பா அரசியல் பக்கம் செல்லாதவர். லாப் சிங்கின் தாயார் வீட்டு வேலையும், தந்தை லாரி டிரைவராகவும் உள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சாதாரண உறுப்பினராக இணைந்த லாப் சிங் பஞ்சாபில் கட்சிக்கு போஸ்டர் ஒட்டும் கடைநிலை தொண்டராக செயல்பட்டார். அதன்பின் வேகமாக சொந்த ஊரில் கட்சி பணிகளை செய்து தலைமையின் கவனத்தை ஈர்த்ததை தொடர்ந்து சட்டசபை தேர்தலில் லாப் சிங் பதார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
முயற்சி செய்து பார்க்கலாம் என்றே முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எதிர்த்து ஆம் ஆத்மி இவரை களமிறக்கியது. லாப் சிங்கிற்கு இந்த தொகுதியில் உள்ள 74 கிராமங்களும் அத்துப்படி என்பதால் அங்குள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்து வைத்திருந்தார். ஆனால் முதல்வராக இருந்தும் கூட சன்னியை பலருக்கும் தெரியவில்லை.
இதனை பயன்படுத்தி லாப்சிங் வீடு வீடாக சென்று தனது தேர்தல் வெற்றியை எளிதாக்கினார். மேலும் பிரச்சாரத்தின் போது கூட நான் 12வதுதான் படித்து இருக்கிறேன். ஆனால் எனக்கு என் மக்கள் பிரச்சனை தெரியும். என் தொகுதி பிரச்சனை தெரியும். எங்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதியில் நான் வெற்றிபெறுவேன். அப்போது முதல்வர் சன்னி தனக்கு இந்த தொகுதியை பரிந்துரை செய்தவரை தேடி தேடி உதைப்பார் என கூறியிருந்தார். கடைசியில் அவர் சொன்னது தான் நடந்ததுள்ளது.