தூத்துக்குடி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இன்ஜினியருக்கு கொரோனா தொற்று உறுதி

covid Philippines thoothukudi engineer
By Jon Mar 27, 2021 06:10 AM GMT
Report

தூத்துக்குடி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல் இன்ஜினியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்காவில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு எம்.எஸ்.சி.மிலா3 என்ற கப்பல் 29 மாலுமிகளுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது.

அந்த கப்பலில் இன்ஜினியராக பணியாற்றி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹான்பில்லா அந்தோணி ஒபிரியானோ (44) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் கப்பலில் இருந்த மற்ற 28 மாலுமிகளுக்கும் கரோனா அறிகுறிகள் தென்படுகிறதா? என்று பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. இதனால் மற்ற மாலுமிகளுடன் கப்பல் புறப்பட அனுமதிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 473 ஆக உள்ளது. இதில் 16 ஆயிரத்து 257 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 73 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 143 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர்.