அமெரிக்காவில் வானிலிருந்து கொட்டிய ‘மீன் மழை’ - அரண்டு போன மக்கள்
அமெரிக்காவில் வானத்திலிருந்து மீன்கள் மழை போல பொழிந்ததை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா எனும் பகுதியில் கடந்த டிசம்பர் 30ம் தேதி தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது,. வானில் இருந்து மழைத் துளிகளுக்கு மாறாக இப்படி ஜீவராசிகள் வானத்தில் இருந்து விழுந்தால் மக்கள் ஆச்சரியப்படாமல் என்ன செய்வார்கள். விலங்குகள் மழை போல வருவது அறிவியல்பூர்வமாக நடக்கக் கூடிய ஒன்று தான்.
சிறிய தண்ணீர் ஜீவராசிகளான தவளைகள், நண்டுகள், சிறிய மீன்கள் போன்றவை காற்றழுத்தத்தால் நீர்நிலைகளில் இருந்து இழுக்கப்பட்டு அவை அதே பகுதிகளில் மழைத்துளிகளுடன் சேர்ந்து மழை போல நிலப்பரப்பில் பொழியும். ஆனால் இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்றாகும். இதற்கு முன்னர் கலிபோர்னியா , வடக்கு செர்பியா போன்ற பகுதிகளில் மீன் மழை பொழிந்திருக்கிறது.
இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பொதுமக்களில் சிலர் மீனின் அளவை காட்டும் வகையில் அதன் அருகே நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இன்னும் சிலரோ இறந்து போன மீன்களை அப்புறப்படுத்தாவிட்டால் சுகாதாரக்கேடு ஏற்படுமே என கவலை தெரிவித்துள்ளமர்.