3 ஆண்டுகள் கழித்து வெளியான பேட்ட படத்தின் நீக்கப்பட்ட மாஸ் காட்சி - நீங்களும் பாருங்க..!
ரஜினியின் ’பேட்ட’ படம் வெளியாகி மூன்று வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி , த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி,சசிக்குமார், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பேட்ட’ படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட ‘பேட்ட’ வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதில் ஜித்து விஜய் சேதுபதியை ’நீ என் மகன்’ என்று நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு முன்பு எடுக்கப்பட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளன. ‘டீ சாப்பிடலாம்னு யோசிக்கிறேன்’, ‘இருப்பா டீ நல்லாருக்கு சாப்ட்டு போகலாம்’, ‘இன்னொரு டீ சாப்பிடலாமா’ என்று டீயை ’டீப்’பாக குடித்துக்கொண்டே விஜய் சேதுபதியை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் ரஜினி... நவாசுதீன் சித்திக்கிடம் அறை வாங்கிய கடுப்பான மனநிலையில் அமர்ந்துகொண்டே துள்ளலுடன் நடனமாடும் விஜய் சேதுபதி காட்சிகள் ரசிக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.