பெட்ரோல் வரி ரூ.3 குறைப்பு - நாளை முதல் அமல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு, இன்று தனது முதல் பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்கிறது.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தாக்கல் செய்தார்.
வரலாற்றில் முதல்முறையாக `மத்திய பட்ஜெட் 2021-2022' காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் ஆனது. இதன் காரணமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் `பஹி காட்டா’ எனப்படும் கணக்கு லெட்ஜர்கள், அதாவது வழக்கான பட்ஜெட் ஆவணங்களுக்குப் பதிலாக `டேப்லெட்டு'டன் பட்ஜெட் அமர்வுக்கு வந்திருந்தார்.
அதே போன்றொரு `காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்'டைத்தான் தமிழக அரசும் தற்போது முன்னெடுத்திருக்கிறது.
இதற்கான கணிணிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அமைப்புகள் கலைவாணர் அரங்கத்தில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருந்தன. இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு மூலம் லிட்டருக்கு 3 ரூபாயைக் குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இது உழைக்கும் வர்க்கத்திற்கு பயனளிக்கக்கூடிய அறிவிப்பாகும். இதனால் தமிழக அரசின் பெட்ரோல் வரி வருவாயில் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.