பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு - திரும்பி பார்க்க வைத்த முதலமைச்சர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்து வருகிறது. அதற்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அனைத்து மாநிலங்களிலும் ரூ. 100-ஐ தாண்டி விற்பனையானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனிடையே கடந்த நவம்பர் முதல் வாரத்தின்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை பிரதமர் மோடி குறைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 10 ரூபாயும் குறைக்கப்பட்டது.
மத்திய அரசை பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் பல்வேறு மாநிலங்கள் அதிரடியாக விலைக் குறைப்பு செய்தன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுடைய அறிவிப்பு, இந்தியாவையே திரும்ப பார்க்க வைத்துள்ளது. இதுதொடர்பாக ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்ததன் காரணமாக, பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அவர்களின் நலனை கவனத்தில் கொண்டு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 25 குறைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். 4 சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது. விலைக்குறைப்பு குடியரசு தின விழாவான ஜனவரி 26 ஆம்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
அதேசமயம் பெட்ரோல் போடும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழக்கான பெட்ரோலுக்கான தொகையை கொடுத்து விட வேண்டும். அவர்களது வங்கி கணக்கில் லிட்டருக்கு ரூ. 25 வழங்கப்படும். அதிகபட்சமாக 10 லிட்டர் பெட்ரோல் வரைக்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.