பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமற்றது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையால் அதிர்ச்சி

fuelprice பழனிவேல் தியாகராஜன் palanivelthiagarajan
By Petchi Avudaiappan Nov 19, 2021 09:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைப்பது சாத்தியமற்றது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுக்க கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல் டீசல் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து மக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் பல்வேறு பாஜக கட்சி ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலையில் வாட் வரியை குறைத்தது. இந்த நிலையில் மற்ற மாநில அரசுகளும் மாநில வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெட்ரோல் வரியில் 3 ரூபாய் குறைத்துவிட்டதால் இதில் கூடுதலாக வரியை குறைக்கவில்லை. 

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமற்றது:  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையால் அதிர்ச்சி | Petrol Diesel State Tax Cannot Be Deducted In Tn

இந்த நிலையில் தமிழக அரசு மாநில வரியை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி, மக்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காத நிலையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், நமது நாட்டிற்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தோம். இதனால், ஆண்டு ஒன்றிற்கு மாநில அரசிற்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. கடந்த அரசு விட்டுச்சென்ற நிதி நெருக்கடிச் சூழலிலும் இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் ஏற்பட்ட விலைவாசி உயர்வைக் குறைக்கவேண்டியதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவும் (Monetary Policy Committee) வலியுறுத்தி வந்தது.

பல மாநில அரசுகளும் இக்கோரிக்கையை முன்வைத்தன. ஒன்றிய அரசும் 3.11.2021 அன்று பெட்ரோல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூபாய் 5 மற்றும் டீசல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூபாய் 10 எனவும் குறைத்துள்ளது. ஒன்றிய வரிவிதிப்பிற்குப் பின் "Ad valorem" வரிகளை தமிழ்நாடு விதிப்பதால், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக 0.65 ரூபாயும் (மொத்தம் 5.65 ரூ.), டீசலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக 1.10 ரூபாயும் (மொத்தம் 11.10 ரூ.) குறையும்.

இதனால், மாநில அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஒன்றிய அரசானது மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை மேலும் இதற்கு நிகராகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது, ஒரு ஏற்றுக்கொள்ள இயலாத கோரிக்கை. ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது ஒரு லிட்டர் டீசல் வாங்கும்பொழுது, அதன் சில்லறை விற்பனை விலையை நிர்ணயிப்பதில் பல அம்சங்கள் உள்ளன- அடிப்படை விலை (கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு விலையைச் சார்ந்தது), அதன்மீது ஒன்றிய அரசின் கலால் மற்றும் மேல்வரிகள் / கூடுதல் கட்டணங்கள், போக்குவரத்துச் செலவுகள், மாநில அரசின் வரிகள் மற்றும் முகவர் கட்டணங்கள். 1.8.2014 அன்று பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலை மற்றும் உலக அளவில் இறக்குமதி விலை, ரூபாய் மதிப்பில் இன்றைய இறக்குமதி விலைக்கு நிகராக இருந்தது.

பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றிற்கு 48.55 ரூபாய் மற்றும் டீசலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றிற்கு 47.27 ரூபாயாக இருந்தது. 4.11.2021 அன்று பெட்ரோலின் அடிப்படை விலை 48.36 ரூபாய் மற்றும் டீசலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றிற்கு 49.69 ரூபாயாக இருந்தது. 1.8.2014ல், ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோலைப் பொறுத்த அளவில் லிட்டர் ஒன்றிற்கு 9.48 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 3.57 ரூபாயும் இருந்தன. அச்சமயத்தில், மாநில அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 15.47 ரூபாயும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 10.23 ரூபாயாகவும் இருந்தன. 

ஒன்றிய அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி குறைப்பதற்கு முன்பாக, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு 32.90 ரூபாயாகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்கு 31.80 ரூபாயாகவும் இருந்தன. இதை, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 27.90 ரூபாயாகவும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 21.80 ரூபாயாகவும் ஒன்றிய அரசு தற்போது குறைத்துள்ளது. அதாவது, 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, (அடிப்படை விலை ஏறத்தாழ சமமாக இருந்தபொழுது) பெட்ரோலுக்கு 18.42 ரூபாயும், டீசலுக்கு 18.23 ரூபாயும் இன்னும் ஒன்றிய அரசு கூடுதலாக விதித்து வருகிறது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்பொழுது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ.21.46 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்குரூ.17.51 ஆகவும் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்தக் கூடுதலான வரியை (பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் - இதில், 3 ரூபாய் நாங்கள் ஆகஸ்ட் மாதத்தில் குறைத்தோம் மற்றும் டீசல் மீது ஒரு லிட்டருக்கு 7.25 ரூபாய்) கடந்த அதிமுக அரசு தான் செலுத்தியது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு ஏற்கெனவே பெட்ரோல் மீதான வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.3 அளவிற்கு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு 14 ஆகஸ்ட் 2021 முதல் அமல்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. இதை, மீண்டும் 2014 ல் இருந்த அளவிற்குக் குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்து விடும். ஏனென்றால், இந்த வரி விதிப்பு அடிப்படை விலை மற்றும் ஒன்றிய அரசின் வரி விதிப்பின் மீது விதிக்கப்படும் வரியாகும். 

எனவே, ஒன்றிய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். இதுவே, அனைவரும் பயனடையும் எளிமையான, நியாயமான ஒரே தீர்வாகும். இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.