100ஐ தொட்ட பெட்ரோல் விலை.. தொடர்ந்து அதிகரிக்கும் விலையால் மக்கள் அவதி
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று விற்பனையானது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.90 ஆக இருப்பதால், அடுத்த சில நாட்களில் ரூ.100-ஐக் கடந்துவிடும். 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66 பைசாவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும், கடந்த 9-வது நாளாகத் தொடர்ந்து விலை உயர்த்தப்படுவதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.59 பைசாவும், டீசல் விலை ரூ.2.82 பைசாவும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதன்படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 25 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை100 ரூபாயைக் கடந்து, ரூ.100.13க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டீசல் ரூ.93.16 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கங்கா நகரில் பிராண்டட் பெட்ரோல் ரூ.102.91க்கும், டீசல் 95.79க்கும் விற்பனையாகிறது.
பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது மத்திய அரசு வரியை உயர்த்தியது. தற்போது கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல் விலையும் உயர்கிறது.