திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

valimaistorm petrolbombattackvalimaitheatre akvalimaireleased
By Swetha 9 மாதங்கள் முன்

கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று அதிகாலை கோவையில் திரையரங்குகளில் வெளியானது.

இதையொட்டி நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு திரண்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், உற்சாக நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு காத்திருந்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் காலை 5 மணிக்கு காட்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

4.30 மணி வரை ரசிகர்களை திரையரங்குக்கு அனுமதிக்காததால் ரசிகர்கள் அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து திரையரங்கிற்குள் நுழைந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து 5 மணிக்கு காட்சி துவங்கியதும் ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்த அந்த பெட்ரோல் குண்டு காரணமாக இருசக்கர வாகனம் ஒன்று லேசான சேதம் அடைந்தது. உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அந்த வாகனத்தை தள்ளி நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அங்கிருந்த ரசிகர்களை அப்புறப்படுத்திவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ரசிகர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.