கோவையில் தொடரும் பதற்றம் - அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு, மற்றும் கல் வீச்சு சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தொடரும் பதற்றம்
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் இல்லங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவை, சித்தாபுதுார் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து அரசுப் பேருந்து மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை பொள்ளாச்சி பாஜக பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் டீசல் நிரப்பபட்ட பிளாஸ்டிக் கவரை வீசி அவரது காரையும் சேதப்படுத்தியுள்ளன.
மேலும் இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஆட்டோவையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பொன்ராஜ் காரையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து பாஜக ரத்தினபுரி மண்டலத் தலைவர் மோகன்குமார் அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதி மதன்குமார், சச்சின் ஆகியோருக்கு செந்தமான பிளைவுட் கடைகளின் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
போலீசார் குவிப்பு
இச்சம்பவங்கள் தொடர்பாக தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பின்னர் கோவை மாநகரில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசியல் கட்சி அலுவலகங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.