‘உனக்கெல்லாம் பெண் கொடுக்க மாட்டேன்...’ - ஆத்திரத்தில் அத்தை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞன்
மகளை திருமணம் செய்து தர விருப்பமில்லை என்று சொல்லிவிட்டதால் மாமா வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார் இளைஞர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை, செல்லூர் மீனாம்பாள்ளைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது சகோதரி மீனா. அவரது மகன் தீபன் சக்கரவர்த்தி. இவர் கட்டட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபன் தனது மாமன் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்பி உள்ளார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் தனது மாமா பாலமுருகனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ராஜேஸ்வரியுடன் அதாவது அத்தையுடன் அவரது மகளை தனக்கு கட்டித்தர கேட்டுள்ளார். இதற்கு மாமாவுக்கும், அத்தைக்கும் விருப்பம் இல்லை.
இதனால், கடும் கோபத்திற்கு ஆளான அவர் அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். உறுதியாக உனக்கு பெண் கொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டனர். இதனையடுத்து, ஆத்திரம் அடைந்த தீபன், திட்டமிட்டு தான் முன்கூட்டியே கொண்டு வந்த பெட்ரோல் குண்டினை வீட்டின் வாசலில் வீசிவிட்டு தப்பி விட்டார்.
இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.