தமிழகத்தில் 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இவற்றில் பெட்ரோல், டீசல் விலை தினமும், கேஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என கூறப்பட்டது.
அதன்படி கிட்டதட்ட 137 நாட்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்த நிலையில் இன்று பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இதேநிலை நீடித்து வருவதால் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் மாபெரும் போராட்டத்தை கையிலெடுக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.