சூரியின் உணவகத்தை சீல் வைக்க வேண்டும் - கலெக்டரிடம் பரபரப்பு புகார்
சூரியின் அம்மன் உணவகத்தை சீல் வைக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சூரியின் உணவகம்
நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த உணவகத்தை சீல் வைக்குமாறு வழக்கறிஞர் முத்துக்குமார்என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.
செப்டிக் டேங்
இந்த மனுவில், பொதுப்பணி துறையினரால் 434 சதுரடி பரப்பு மட்டுமே அம்மன் உணவகம் செயல்பட அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் உணவக நிர்வாகத்தினர் செவிலியர் விடுதியில் கழிவுநீர் தொட்டி அமைந்திலுள்ள இடத்தில் விதிமுறைகளை மீறி கூடுதலாக 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 சதுர அடி திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
மேலும், 10க்கும் மேற்பட்ட கழிவுநீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் நடுவேதான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பெருச்சாளி, கரப்பான் பூச்சிகள் நடமாடி வருகிறது. அம்மன் உணவகத்தின் அருகில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது.
அம்மன் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் வந்து உணவு தயார் செய்யப்படும் நிலையில், இந்த மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், புறநோயாளிகள், உள் நோயாளிகள் இங்கு சாப்பிடும் போது உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.