முடிவுக்கு வந்த இறைச்சி கடை பிரச்சனை - தீபாவளியன்று கடைகளை திறக்க அனுமதி

tngovernment diwali2021 deepavali2021 meatshops
By Petchi Avudaiappan Oct 30, 2021 04:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதே நாளன்று மகாவீரர் மோட்சம் பெற்ற நாளான “மகாவீர் நிர்வான் தினம்” ஜெயின் மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. இதனால் அந்த தினத்தில் தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூடி வைக்க அரசு உத்தரவிடுவது வழக்கம். 

இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று மகாவீர் நிர்வான் தினம் வருவதால் சென்னையில் நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சி கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால் தீபாவளி பண்டிகையன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும் என்பதால் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. 

மேலும் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை பரிசீலித்தும் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களை சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளையும், ஜெயின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளையும் திறக்க அனுமதி இல்லை  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.