“தேதியை குறித்து வச்சுகோங்க” - சென்னை புத்தக கண்காட்சி எப்போ தெரியுமா?
சென்னையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி மாதம் 6ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இதனால் புத்தக கண்காட்சி நடைபெறுவது தள்ளிப்போனது. அதேசமயம் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் தேங்கியிருப்பதாகவும், எனவே புத்தக கண்காட்சிக்கு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை 45வது புத்தக கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தக கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.