பெரியார், அண்ணா பேரணிக்கு அனுமதி மறுப்பு: உதயநிதி கண்டனம்
தந்தை பெரியார், அண்ணாவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல் துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல் துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்வர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.