பரியேறும் பெருமாள் பட கருப்பி நாய் உயிரிழப்பு - பட்டாசு வெடித்ததால் நேர்ந்த சோகம்
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் உயிரிழந்துள்ளது.
மாரி செல்வராஜ்
தமிழ் திரையுலகில் இன்று முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் வெற்றிப்படமாக அமைந்தது.
சாதிய அடக்குமுறைக்கு எதிரான இந்த படத்தில் நடிகர் கதிர் கருப்பி என்ற சிப்பிப்பாறை நாயை வளர்த்து வேட்டைக்கு பயன்படுத்தி வருவார்.
கருப்பி நாய்
அப்போது ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் அந்த நாயை பிடித்து ரயில் தண்டவாளத்தில் கட்டிப்போடுவர். ரயில் மோதி ‛கருப்பி' நாய் இறந்துவிடுவதாக கட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதோடு ‛‛அடி கருப்பி.. அடி கருப்பி..'' என்று கருப்பி நாய்க்கு தனி ஒப்பாரி பாடல் இடம்பெற்றிருந்தது.
இந்த படத்தில் நடித்த விஜயமுத்து என்பவர் இந்த கருப்பி நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் தீபாவளி அன்று வெடி சத்தத்தை கேட்டு பயந்த கருப்பி நாய் சாலையில் ஓடியுள்ளது. அப்போது சாலையில் வந்த வாகனத்தில் மோதி நாய் உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து நாயின் உரிமையாளரும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவருமான விஜயமுத்து என்பவர் நாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் பண்ணியுள்ளார். கருப்பி நாய் உயிரிழந்த சம்பவம் பரியேறும் பெருமாள் பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.