பெரியதாழையில் கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் - கனிமொழி எம்.பி. உறுதி!
பெரியதாழையில் கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கானப்படுவதுடன் மீனவர்களின் படகுகளையும் உடமைகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடல் அரிப்பை தடுக்க வேண்டும், படகுகளையும் மீனவர்களின் உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெரியதாழை கடற்பகுதியில் ஆய்வு செய்தார்.
இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், கோட்டாட்சியர் தனபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களின் கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக பெரியதாழையில் கடலரிப்பு ஏற்படும் பகுதியை நேரில் பார்வையிட்டு உள்ளோம் என்றும் நிச்சயமாக அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.