தந்தை பெரியார் பிறந்தநாள்: சமூகநீதி தினமாக கொண்டாட்டம்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பெரியார் பிறந்த நாள் விழா இனி சமூகநீதி விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தது. இதனையடுத்து பெரியாரின் 143வது பிறந்த நாளான இன்று, சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி அண்ணா சாலையிலுள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
மேலும் சமூக நீதி நாளாகக் கொண்டாடும் விதமாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுபோலவே சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பிலுள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் சமூக நீதி கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன.