முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிப்பதாக இன்று தீர்ப்பளித்தது.
இதனை கொண்டாடும் வகையில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கியும் பறை இசைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து பேரறிவாறன், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரோடு இன்று மாலை சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.