30 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வந்தடைந்தார் பேரறிவாளன்

Stalin Perarivalan Rajiv Gandhi Ezhuvar
By mohanelango May 28, 2021 09:48 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதன் அடிப்படையில், சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என அவருடைய தாயார் அற்புதம்மாள் கடந்த 18ஆம் தேதி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கோரிக்கையில் புழல் சிறையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் கடந்த 19ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

30 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வந்தடைந்தார் பேரறிவாளன் | Perarivalan Reaches Home In 30 Day Parole

அதனைத் தொடர்ந்து இன்று சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார். 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் பேரறிவாளனின் வீட்டிற்கு 40க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரக நோய் தோற்று காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.