குடும்பத்துடன் பறை இசைத்து தனது விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இருந்ததாக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், தான் நீண்ட நாள்களாக சிறையில் இருக்கிறேன், சிறையில் எனது நடத்தை மற்றும் நன்னடத்தை எல்லாம் சரியாக இருக்கிறது. பெல்ட் வெடிகுண்டுவில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கி கொடுத்தது நான் தான் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை அதனால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
மத்திய அரசு இந்த வழக்கில் தாமதப்படுத்தியதை அடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஜாமீன் வழங்கி இருந்தது. ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவது தவறு என நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன் வழக்கு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மேலும் இந்த வழக்கில் இருந்து பேரறிவாளனை நாங்களே ஏன் விடுதலை செய்யக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன்பின்பு இந்த வழக்கு பேரறிவாளனின் விடுதலையை ஒட்டிய வழக்காக மாறியது.
இந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதம் மற்றும் அவர் இந்த விவகாரத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது இவை இரண்டுமே அரசியல் சாசன ரீதியிலான பிழையாக பார்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஏன் இந்த வழக்கில் நாங்களே தலையிட்டு விடுதலை செய்யக்கூடாது என கேட்டிருந்தனர்.
இதையடுத்து தான் இன்று உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி விடுதலை அளித்து தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தனது விடுதலையை பறை இசைத்து கொண்டாடினார் பேரறிவாளன்.