பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் முக்கியமான மனுதாக்கல்
முன்னாள் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் பேரறிவாளன் இடைக்கால ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமது விடுதலை மீதான முட்டுக்கட்டை, முழுக்க முழுக்க அரசியல்தான் என்றும், நீதியை எதிர்பார்க்கும் மனுதாரருக்கு அது நீதிபதிகளின் தயவால் மட்டுமே கிடைக்கும் என்றும் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார்.
நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வரை முடிவு எடுக்கவில்லை.
அந்த பரிந்துரையை அவர் மீண்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பினார். 7 பேர் விடுதலை விஷயத்தில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.
இதனிடையே ஏழு பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த 20ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்தச் சூழலில் பேரறிவாளன் இடைக்கால ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.