தாயார் அற்புதம்மாளுடன் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தார் பேரறிவாளன்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து பலரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்தனர். பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பேரறிவாளனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தீர்ப்பு வெளியான அன்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்புவதாக கூறினார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ உள்ளிட்ட தலைவர்களை தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்து பேசினார்.
அந்த வகையில் தற்போது பேரறிவாளன் தன் தாயார் அற்புதம்மாளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.