பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் ஒரு மாதகால பரோல் முடிந்து இன்று அவரது வீட்டிலிருந்து புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.அந்த கோரிக்கையில் புழல் சிறையில் கொரானா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த மாதம் 28ஆம் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்றுடன் பரோல் முடிந்த நிலையில்,இன்று காலை அவரது வீட்டிலிருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் மேலும் 30 நாட்கள் பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.