தமிழகத்தில் கனிமவளமிக்க பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாறு அறிவோம்
322 சதுர கிலோ மீட்டர் தான் என்றாலும் பெரம்பலூரில் சிறப்புக்கள் தெரியுமா..?
பெரம்பலூர் மாவட்டம்
கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தின் தலைநகராக பெரம்பலூர் நகரம் உள்ளது. இம்மாவட்டம் 322 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாகும். 1995-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கடந்த 2007-ஆம் ஆண்டு நவம்பர் 23-இல் தமிழகத்தின் 31-ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் 1 வருவாய் கோட்டம், 4 வருவாய் வட்டங்கள், 11 உள் வட்டங்கள் மற்றும் 152 வருவாய் கிராமங்கள் உள்ளன. பெரம்பலூர் மற்றும் குன்னம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும், பெரம்பலூர் என ஒரு மக்களவை தொகுதியும் இம்மாவட்டத்தில் உள்ளது.
பெயர் விளக்கம்
பண்டைய காலகட்டத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் அந்த பெயரே அது மருவி பெரம்பலூர் என்றாகிவிட்டது. அதே நேரத்தில் சில இடங்களில் பெரும்பல்லூர் என்னும் பெயரே மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதே போல இந்த பகுதியில் பழம்காலம் முதலே பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்து வந்த காரணத்தால் அதிலிருந்து பல பொருள் சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், பிரம்பலூர் என்ற பெயர் காலபோக்கில் மாறி பெரம்பலூர் ஆக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.
பொருளாதாரம்
தமிழகத்தில் கனிமவள மிக்க மாவட்டங்களில் ஒன்றாக பெரம்பலூர் மாவட்டம் கருதப்படுகிறது. சுண்ணாம்பு கல், செலஸ்டி, பாஸ்பேட் மற்றும் கங்க்கர் முடிச்சுகள் இம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெறுகின்றன. இம்மாவட்டத்தின் குன்னம் மற்றும் வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் செங்கல்கள் தயாரிக்கப்படும் செங்கற்சுலைகள் அதிகளவில் இருக்கின்றன.
இருப்பினும், இம்மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயமே ஆகும். மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 1,75,739 ஹெக்டரில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு மட்டும் 93,581 எக்டேராகும். ஆண்டிற்கு சராசரியாக 861 மி.மீட்டா் மழை பொழிவை இம்மாவட்டம் பெறுகிறது. தமிழகத்திலேயே பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலுார் மாவட்டமே திகழ்கிறது.
இம்மாவட்டத்தில் முக்கிய பயிர்களாக கரும்பு, பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்ப்படுகின்றன. தற்போது இந்த மாவட்டத்தில் இருந்து 27% சோளமும், 50% சின்ன வெங்காயமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
ஆனைக்கட்டி அருவி
ஆனைக்கட்டி அல்லது செக்காத்திப்பாறை அருவி என்றழைக்கப்படும் இந்த அருவி பெரம்பலூர் மாவட்டத்தின் லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இந்த ஆனைக்கட்டி அருவி பச்சைமலையில் உள்ளது.இந்த அருவி துறையூரிலிருந்து தண்ணீர் பள்ளம் செல்லும் வழியில், மயிலூற்று அருவிக்கு வடமேல் பகுதியில் உள்ளது. இந்த அருவியை சுற்றி அடர்ந்த வனப்பகுதியும் அமைந்துள்ளது.
ஆனை கட்டி அருவியில் நீர் வரத்து அதிகரிக்கும் போது இந்த அருவியின் உபரிநீரானது ஈச்சம்பட்டி, செஞ்சேரி,குரும்பலூர், லாடபுரம், பாளையம், பெரம்பலூர் துறைமங்கலம், அரணாரை போன்ற ஏரிகளை நிறைக்கும். ஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருக்கும் இந்த அருவி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பொழியும் மழையால் செழிப்புற்று மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்குகின்றது.
சாத்தனூர் கல்மரம்
பெரம்பலூரின் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தனூர் கல் மரம் உள்ளது. பெரம்பலூர் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் அமைந்துள்ள இங்கு புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்காவும் உள்ளது.கடந்த 1940-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணன் இந்த கல்மரத்தை கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 120 மில்லியன் ஆண்டு பழமையான பழங்கால மரம் இவ்வாறு கல்லாக மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த கல்மரம் இந்த பகுதியில் சுண்ணாம்புக்கல் காலத்தின் போது கடல் இருந்ததற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்த கல்மரம் 18 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இதே போன்ற புதைக்கப்பட்ட மர கற்கள் அருகிலுள்ள அனைப்பாடி, வரகூர், சரடமங்கலம் மற்றும் அலுந்தலைப்பூர் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஞ்சன்குடிகோட்டை
விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கி.பி 14ம் நூற்றாண்டில் இந்த ரஞ்சன்குடிகோட்டை கட்டப்பட்டது ரஞ்சன்குடி கோட்டை மற்றும் அங்கு அமைந்துள்ள கோவில்கள் கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்பிரஞ்சு படையினருக்கும் நடைபெற்ற வாலிகொண்டா போர் இந்த இடத்தில் தான் நடைபெற்றுள்ளது.வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டை தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் இருக்கின்றது.
வெவ்வேறு உயரங்களில் மூன்று அரண்களால் சூழப்பட்டு கட்டப்பட்டுள்ள இக்கோட்டையில் அரசர்களுக்கு என்று தனியே உரிய மாளிகையும், குடியிருப்பு கட்டிடங்களும், சுரங்க அறைகளும், மசூதிக்கள் மற்றும் கொடிக் கம்பங்கள் ஆகியவை அமைந்துள்ளன.