பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம் 1.1.1995 அன்று திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், கடலூர்,சேலம், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியும், பெரம்பலூர்(SC), குன்னூர் என இரு சட்டமன்ற தொகுதிகளும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியும் உள்ளது.
கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ்
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ் 2014 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பெங்களூருவில் சட்டபடிப்பை முடித்துள்ள இவர், மிசோரம் மாநில முன்னாள் தலைமைச் செயலர் வான்ஹெலா பச்சுவாவின் மகள் ஆவார்.
கோயம்புத்தூர் மாவட்ட பயிற்சி ஆட்சியர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சார் ஆட்சியர், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிர்வாக இயக்குநர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(கல்வி), கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த க.கற்பகம் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கடந்த 19.07.2024 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
கற்பகம் ஐ.ஏ.எஸ்
நில நிர்வாக இணை ஆணையர், சென்னை வணிக வரிகள் இணை ஆணையர், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் இணை நிர்வாக இயக்குநர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரீ வெங்கட பிரியா ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 05.02.2023 முதல் 19.07.2024 வரை கற்பகம் ஐ.ஏ.எஸ் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
ஸ்ரீ வெங்கட பிரியா ஐ.ஏ.எஸ்
சிவகங்கை மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியராக தனது பணியை தொடங்கியுள்ளார். தொடர்ந்து திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி, முதல் சேலம் பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குநர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய(TRB) தேர்வுக் கட்டுப்பாட்டாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வி. சாந்தா ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 02.11.2020 முதல் 04.02.2023 வரை ஸ்ரீ வெங்கட பிரியா ஐ.ஏ.எஸ் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ்
கேரளாவை சேர்ந்த தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ், 1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சப் கலெக்டர் மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) , சென்னை வடக்கு கோட்ட இணை ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(பணிகள்), தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த 06.06.2011 முதல் 21.01.2016 வரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது அவரது சிறந்த பணிக்காக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விருதுகளை பெற்றுள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலை சிறந்த முறையில் நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராட்டப்பட்டார்.
பெண் குழந்தைகளை காப்பாற்றும் திட்டங்களை செயல்படுத்திய சிறந்த மாவட்ட ஆட்சியர் என பிரதமர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையிலான குழு, அங்கு 450க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்துள்ளது. இதில் ஒரு மதத்தைச் சேர்ந்த திருமணத்தை தடுத்ததற்காக தாரேஸ் அகமதுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டது. எல்லா குழந்தைகளும் ஒன்றுதான், திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என உறுதியாக இருந்தார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்டு, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். மேலும், மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும் வரை கண்காணிக்க ஒரு குழு அமைத்திருக்கிறார். இதன் மூலம் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விவசாயிகள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் எளிமையாக பழகி குறைகளை கேட்டறிந்து தீர்ப்பார் எனபெரம்பலூர் மாவட்ட மக்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 முதல் தற்போது வரை பெண் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.