7 மாணவிகளுக்கு கொரோனா உறுதி - தனியார் பள்ளி மூடல்
பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கூட்டம் கூடாத வண்ணம் தடுக்கவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சமூக இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை, மாஸ்க் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. எனினும், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகிறது.
சேலம், திருப்பத்தூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மாணவிகளுடன் தொடர்பில் இருந்த சக மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
7 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதன் காரணமாக பள்ளி வளாகம் மூடப்பட்டு அக்.3ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.