போஸ்டருடன் வருபவர்களுக்கு சபரிமலையில் அனுமதியில்லை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
நடிகர்கள், அரசியல்வாதிகளின் போஸ்டருடன் வருபவர்களை சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை தரிசனம்
சமீப காலமாக சபரிமலை கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போஸ்டர்களுடன் வந்திருந்தனர். தரிசனம் முடிந்த பிறகு கோயில் முன்பு நின்று போஸ்டர்களை தூக்கி காண்பித்தபடி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து கேரளாவை சேர்ந்த ஒரு பக்தர், சபரிமலைக்கு சினிமா நடிகர்களின் போஸ்டர்களுடன் வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கேரளா உயர் நீதிமன்றத்துக்கு மனு ஒன்றை அளித்தார். இதை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அனுமதியில்லை
மனுவை விசாரித்த நிதிபதிகள் சபரிமலைக்கு தற்போது தினமும் 90 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து கொண்டிருக்கிறனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதை பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகளின் போஸ்டர்களுடன் வருபவர்களை 18ம் படியில் ஏற அனுமதிக்க கூடாது என்றும், அவர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
மேலும் கோயில் வளாகத்தில் டிரம்ஸ் போன்ற வாத்திய உபகரணங்களை இசைக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்க கூடாது பக்தர்கள் எந்த சிரமமுமின்றி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயில் வளாகத்தில் சினிமா நடிகர்களின் போஸ்டர்களுடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்தது தொடர்பாக சபரிமலை கோயில் அதிகாரி உடனே விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.