மதுரையில் அதிரடி அறிவிப்பு - கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு சிக்கல்

madurai covidvaccine
By Petchi Avudaiappan Dec 03, 2021 06:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வு என்பதால் மத்திய, மாநில அரசுகள் அதனை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. 

அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதித்து சமீபத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த வகையில் மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் ஒரு டோஸ் மட்டுமாவது செலுத்தி இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அங்கு வரும் மக்கள் சோதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி செலுத்தாவிட்டால், ஊசி செலுத்த ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படும். ஒரு வாரத்திற்கு பின்பும் தடுப்பூசி செலுத்தாமல் வந்தால் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படும். பொது இடங்களுக்கு வரும் நபர்கள் மொபைல் குறும்செய்தியை காண்பிக்க வேண்டும். டாஸ்மாக், பார்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மது வழங்க வேண்டும்.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, ஓட்டல், தங்கும் விடுதி, பார், ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71% பேரும், 2ம் தவணை 32% பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.  மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்த நிலையில் ஆட்சியர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.