30 வயதுக்கு மேற்பட்டவர்களே... உஷாராக இருங்கள் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவின் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,459 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதுவரை சென்னையில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 10,685 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
4, 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 23,77,375 பயணிகளை பரிசோதனை செய்ததில் 425 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்கள் என்று பதிவில் தெரியவந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு - ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
ஆண்களை பொறுத்தவரையில் 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.