தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன தெரியுமா? நிதியமைச்சருக்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
நிர்மலா சீதாராமன்
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "அரசியல் ஆதாயத்திற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை தி.மு.க. கிளப்புகிறது என்றும் 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை.
எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது என்றும் கூறினார். இந்த நிலையில், மத்திய மந்திரிக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கனிமொழி எம்.பி
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.