பைக்கில் வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்- 4 பேருக்கு சம்மன்
வாக்குப் பதிவு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றது தொடர்பாக 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நிறைவடைந்தது. அதனையடுத்து, அடுத்த மாதம் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த வாக்குப்பதிவு முடிந்த வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்கு பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு பதிவு இயந்திரங்களை பைக்கில் கொண்டு சென்றுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையில், மாற்று வாக்குப் பதிவு இயந்திரங்களையே இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் ஏற்றி சென்ற விவகாரத்தில் தேர்தல் பணியாளர்கள் 4 பேருக்கு வேளச்சேரி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருக்கிறது.
மேலும் மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், பணியாளர்கள் உட்பட 4 பேர் ஏப்ரல் 12ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.