'ஸ்டாலின் வீட்டு கதவை கூட மக்களால் நெருங்க முடியாது' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
என்னை மக்கள் எப்போதும் எந்த சமயத்திலும் சந்திக்க முடியும், ஆனால் ஸ்டாலின் அவர்களின் வீட்டுக் கதவைக் கூட மக்களால் நெருங்க முடியாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- ஜெயலலிதா அவர்கள் நீலகிரி மாவட்டத்தை தனது சொந்த மாவட்டமாக கருதியதால், அது இந்த மாவட்டத்திற்கே மிக பெரிய பெருமையாகும். ஜெயலலிதாவும் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். திமுக ஆட்சியில் கடுமையான மின் வெட்டு, அதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது. இது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான் சாத்தியமானது. மேலும் தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற மாநிலத்துக்கு தமிழகம் கல்வியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்த உடன் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும்.
நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம். ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது". அதிமுக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், தேர்தலில் மக்கள் திமுகவினருக்கு உரிய பதில் அளிப்பார்கள் என கூறினார்.