கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு: ஏமாற்றத்தால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்.
தமிழகத்தில் கரோனா நோயின் இரண்டாவது அலை அதிக வேகமாக பரவிவருகிறது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு விதிமான மருந்துகள் தடுப்பூசியாக போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசிபோட்டு கொள்வதற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.
முதல்டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முதலில் எந்த மருந்தை போட்டுகொள்கிறார்களோ அதே மருந்ததைதான் 2வது டோசில் போட்டுக்கொள்ள வேண்டும்.
தற்போது கோவாக்சின் மருந்து மிகவும் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி பொட்டுக்கொள்ள வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில 8.30 மணிமுதல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிபோட்டு கொள்வதற்காக பொதுமக்கள் வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர். காலை 11 மணிக்குமேல் நின்றுகொண்டிருந்தவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவு வராததால் தட்டுப்பாடு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் மூலம் கூடுதலாக மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிக அளவில் மருந்துகள் வராததால் முதலில் வருபவர்களுக்கு போடுகிறோம் மருந்து தீர்ந்துவிட்டால் கடைசியில் இருப்பவர்கள் தங்களை ஏதோ புறக்கணிக்கிறார்கள் என்று வாக்குவாதம் செய்கின்றனர்.
தட்டுப்பாடு இல்லாமல் அரசு மருந்து விநியோகம் செய்தால் அரசு மருத்துவமனை செவிலியர்கள் தினந்தோறும் வரும் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர்’ கூறினர்.