ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு: மக்கள் போராட்டம் தொடங்கியது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வருகிற 30ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த எதிர்ப்பு மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆலையை மீண்டும் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிதது வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வருகிற 30ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக எதிர்ப்பு மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். இதையடுத்து அமைப்பின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எதிர்ப்பு இயக்கத்தினர் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையானது மீண்டும் காப்பர் தொழிற்சாலையை திறப்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து தருவதாக மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம் காப்பர் தொழிற்சாலையை திறக்க முயற்சிக்கும். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையின் நயவஞ்சக போக்கை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உற்பத்தி தொடங்கும் முன் தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரியும் வருகிற 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.வி.டி. சிக்னல் அருகே சிதம்பர நகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், உண்ணாவிரத போராட்டதிற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய ஆட்சியர், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது. காப்பர் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினரின் முற்றுகையால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.