ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு: துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் போராட்டம்
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மக்கள், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆக்சிஜன் தயாரிக்கிறோம் என்கிற போர்வையில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க ஆரம்பித்துவிடும் எனத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒத்துக்கொண்டன.
ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தூத்துக்குடி பொது மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 30-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படத்தை ஏந்தி அவர்களின் குடும்பத்தினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.