அமலுக்கு வந்தது ரயில் பயணக் கட்டண உயர்வு; எவ்வளவு தெரியுமா? முழு விவரம்
ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக கடந்த 21- ம் தேதி ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
டிக்கெட் கட்டணம்
இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண ரயில்களில் தினசரி பயணிக்கும் பயணிகளுக்கு 215 கிலோ மீட்டர் வரை எந்த கட்டண உயர்வும் கிடையாது.

அதற்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் மற்றும் புறநகர் ரயில் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
215 கி.மீ தூரத்திற்கு மேல் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி (AC), ஏசி அல்லாத (Non-AC) வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏசி அல்லாத பெட்டிகளில் 500 கி.மீ பயணத்திற்கு, பயணிகள் ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும்.
உயர்வு
இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல் மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் பயண டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கு கட்டண உயர்வு வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு குறித்து பயணிகள் அறிந்து கொள்ள ரயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஏற்கெனவே ஒருமுறை ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.