என்னை சிலர் கேலி செய்கிறார்கள்- நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கத்தான் - கமல் பேச்சு
நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்கு பல்லக்குத் தூக்கத்தான் என்று கமல் பேசியுள்ளார். புதுச்சேரியிலும், தமிழகத்திலும் ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக தனி விமானத்தில் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். பின்னர், மணக்குளம் விநாயகர் கோயில் தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுச்சேரி அரசியல் புதுப்பொலிவு பெறும். எங்களின் வேட்பாளர்கள் மக்களில் ஒருவராக இருப்பார்கள்.
நான் விமானத்தில் பறப்பதை சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கத்தான். மக்களின் பல்லக்கு என் தோளில் உள்ளது.

அதைத் தோளில் தூக்கி சுமக்க வந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வந்தவர்கள் கிடையாது. மக்கள் சேவகர்கள். அவர்களிடம் சேவை பெறும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்று பேசினார். இந்நிலையில், கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக பி.டி.செல்வகுமார் களத்தில் இறங்குகிறார்.
அவரை ஆதரித்து பிரசாரம் கமல்ஹாசன் நாளை மாலை 4 மணிக்கு கொட்டாரம் பொட்டல்குளத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.