நெல்லை, தென்காசியில் நில நடுக்கமா? குலுங்கிய வீடுகள்; அலறி ஓடிய மக்கள்
நெல்லை தென்காசி பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
நில நடுக்கம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 11;55 க்கு வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதாக கூறிய மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலையில் சென்று அமர்ந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இது குறித்து விளக்கமளித்துள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர், நில அதிர்வு சம்பவங்கள் இருந்தால் நில நடுக்க ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும். இதுவரை நில அதிர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். தகவல் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.