அதிகரிக்கும் கொரோனா.. தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தடை..
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கூடுதல் தளர்வுகளின்றி வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரை, சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை கோயில்களிலும், சென்னையில் வடபழனி முருகன் கோவில், கந்தக்கோட்டம் கந்தசாமி கோவில் உட்பட முக்கிய முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.