தனியார் பேருந்தில் அதிக பயணிகள்...அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
தனியார் பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றிவந்ததை கண்டித்த அதிகாரிகளிடம் பேருந்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுாரில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஊழியர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டத்தில் கொரானா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
மூன்று வாரங்களுக்கு முன், ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது 200ஐ நெருங்கியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, பஸ்களில் அதிக கூட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கடலுார், மஞ்சக்குப்பம் பகுதியில் தாசில்தார் மகேஷ், ஆறுமுகம் மற்றும் சுகாதாரத்துறை, போலீசார், நகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அதிக பயணிகளுடன் வந்த தனியார் பஸ்சை நிறுத்தி, பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பஸ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். கொரோனா அதிகமாக பரவுவதால், பஸ்சில் 50 சதவீதத்திற்கு மேல் பயணிகளை ஏற்றக்கூடாது என, எச்சரித்தனர்.
அதற்கு ஊழியர்கள் பயணிகளிடம் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளிடம் கூறுங்கள் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சில பயணிகள் நாங்கள் அவசரமாக செல்ல வேண்டி பஸ்சில் ஏறினோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது' என்றனர். அதைத் தொடர்ந்து பஸ் ஊழியர்களுக்கு அதிக பயணிகளை ஏற்றியதற்காக 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.