பட்டியலின பெண் சமைத்தால் எங்க பசங்க சாப்பிடமாட்டாங்க.. வேறுபாட்டை ஊட்டும் பெற்றோர் - அதிரடி காட்டிய ஆட்சியர்!
கிராம மக்கள் சிலர் பட்டியலின பெண் சமைத்ததை பிள்ளைகள் சாப்பிடாது என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை உணவு திட்டம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண் சமைப்பதற்காக பணியமத்தப்பட்டுள்ளார். இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் அதனால் இந்த கிராம மக்கள் சிலர் இவர் சமைத்ததை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்க பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அந்த பட்டியலின பெண் சமைத்ததை சாப்பிட்டு பார்த்து பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டியலினப் பெண் சமைத்தால் எங்கள் குழந்தை சாப்பிட முடியாது என ஒருவர் கூறியுள்ளார்.
இதையடுத்து கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு சூழல் நிலவியது, மேலும், மாவட்ட ஆட்சியர் அனைத்து மக்களையும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.