நிவாரணம் கொடுக்க வந்த எம்.எல்.ஏ.விடம் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்....
சிவகங்கையில் நிவாரணம் கொடுக்க வந்த எம்.எல்.ஏ.விடம் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு உதவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.
அப்போது அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு குடிநீர் கேட்டும், கழிவுநீர் பாதையை அமைத்து தர கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த தமிழரசி ரவிக்குமார் நாங்கள் ஆட்சிக்கு வந்து 21 நாட்கள்தான் ஆகியுள்ளது. கொரானா தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கும், மக்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
எனவே தங்கள் பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் விரிவாக்கும் திட்டத்தில் சேர்த்து நிரந்தர தீர்வுகாண விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தற்காலிகமாக தண்ணீர் தேவை நிறைவு செய்யவும், கழிவுநீரினை அகற்றிட நடவடிக்கை எடுக்க உத்தவிட்டார். பின்னர் மக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.