திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்க மாட்டார்கள் - ஜி.கே.வாசன் பேச்சு
திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. அதற்காக பல கட்சிகளும் பல வழிகளில் தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மேலும் தேர்தல் பிரச்சாரம் வருகிற ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணியுடன் நிறைவு பெறும் எனவும் தேர்தல் அணியும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து ஈரோடு மாநகர் பகுதியில் இன்று பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் முடிவடைய உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிவாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாக இருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியாளர்களின் வளர்ச்சி திட்டங்களையும், சலுகைகளையும் தமிழக மக்கள் 100 சதவீதம் வரவேற்கிறார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள். மாறாக தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.