மதுரையில் பென்னிகுயிக் வாழ்ந்தாரா? - விடை தெரியாமல் தவிக்கும் கொள்ளுப்பேரன்
மதுரையில் பென்னிகுயிக் வாழ்ந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவரது கொள்ளுப்பேரன் டாம் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரூ.99 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நூலகம் கட்டப்படும் என அவரது பிறந்தநாளில் அறிவிப்பு ஒன்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதற்காக மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லம் இருந்ததாகவும், அதனை இடித்து நூலகம் கட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
இதனை மறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம் என சட்டசபையில் பதிலளித்தார்.
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று பென்னி குவிக்கின் கொள்ளுப்பேரன் முறை உறவினரும், இங்கிலாந்தில் வசிப்பவருமான டாம் கிப்ஸ் உடன் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பென்னிகுயிக் மதுரையில் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டைப் பற்றி நீங்கள் ஏதேனும் அறிந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டாம், மதுரையில் பென்னிகுயிக் வசித்தாரா.இல்லையா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், பெரும்பாலான காலம் தன் வாழ்க்கையை அவர் தமிழகத்தலேயே கழித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கட்டடத்தை இடித்துவிட்டு நூலகம் கட்டப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு எப்போதுமே நூலகம் கட்டுவது சிறந்தது என்றும், நூலகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பது தமிழக மக்கள், மதுரை மக்களின் விருப்பம் என்றும் டாம் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.