தொலைந்த மகனை தேடி 21 முறை புதுச்சேரிக்கு பயணம் செய்த மூதாட்டி ; முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு
கானாமல் போன மகனை தேடி கடந்த இரண்டு ஆண்டுகளில் 21 முறை புதுச்சேரி சென்று தேடிய மூதாட்டி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் 70 வயதான பேச்சியம்மாள்.
இவரது 38 வயதான மகன் ரவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர் அதன் பின்பு திரும்ப வரவே இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் அடிபட்டு புதுச்சேரி மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேச்சியம்மாளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர் புதுச்சேரி விரைந்துள்ளார்.
ஆனால் அங்கு சென்று மருத்துவமனைகளில் விசாரித்தபோது ரவி சிகிச்சை முடிந்து எப்பொழுதோ வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றி திரிந்து கடந்த இரண்டு வருடங்களாக தனது மகனை விடாது தேடி வந்துள்ளார் பேச்சியம்மாள்.
புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் எந்த பலனும் கிட்டாத நிலையில் அவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்து தனது மகனை கண்டு பிடித்து தருமாறு மனு அளித்தார்.
ரவியின் புகைப்படங்கள் மற்றும் அவர் கடைசியாக மூதாட்டியை தொடர்பு கொண்ட தொலைபேசி எண் ஆகியவற்றை கையோடு கொண்டுவந்திருந்த அவர்,
இந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 21 முறை மகனை தேடி புதுசேரி வந்துள்ளதாகவும் இதுவரை ரூ. 60000-திற்கும் மேல் செலவு செய்திருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
மூதாட்டியின் மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மூதாட்டியின் மகனை கண்டுபிடித்து ஒப்படைக்க உருளையன்பேட்டை காவல் நிலையத்தக்கு உத்தரவிட்டார்.