சென்னையை ஏமாற்றிய மும்பை அணி - 5வது போட்டியில் தோற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் இன்று நடந்த 23வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் மயாங்க் அகர்வால் 52, ஷிகர் தவான் 70 குவித்தனர். பஞ்சாப் அணி வீரர் பசில் தம்பி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 28, இஷான் கிஷன் 3 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய டெவால்ட் பிரெவிஸ் 49, திலக் வர்மா 36, சூர்யகுமார்யாதவ் 43 ரன்கள் எடுத்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. முதல் 4 போட்டிகளில் தோற்று இதே நிலையில் இருந்த சென்னை அணி 5வது போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் மும்பையும் இப்போட்டியில் வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் எல்லாம் தலைகீழாக மாறியது காலத்தின் கோலம்...